தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இலங்கைக் கடற்படையின் கைது நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளதாவது:
"தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது 116 இந்திய மீனவர்களும், 184 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீனவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாகக் கைது செய்யப்படும் சம்பவங்கள், மீனவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்னைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மட்டுமல்லாமல் அவர்களை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிக்கிறது" என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.