புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

இந்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காலனிய ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதீனியம் ஆகிய சட்டங்கள் பாஜகவின் முந்தைய ஆட்சியில் கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டிசம்பர் 25-ல் இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக இந்தச் சட்டங்கள் அமையவுள்ளன.

இந்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

"இந்தச் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் வருகிறது. எனவே, மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். தங்களுடையக் கருத்துகளை வெளிப்படுத்த மாநிலங்களுக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை. இந்தப் புதிய சட்டங்கள் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தப் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களிடமும் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. சட்டக் கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டங்களிலும் மாற்றம் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இதற்கு உரிய நேரம் தேவைப்படும். இதை அவசர கோலத்தில் செய்ய முடியாது.

இந்தச் சட்டங்களில் சில அடிப்படை தவறுகளும் உள்ளன. பாரதிய நியாய சன்ஹிதாவில் (பிஎன்எஸ்) பிரிவு 103-ல் இரு வெவ்வேறு கொலைகளுக்கு இரு உட்பிரிவுகள் உள்ளன. ஆனால், தண்டனை ஒன்றாக இருக்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா ஆகிய சட்டங்களில் தெளிவற்ற, சுயமுரண்பாடுகளைக் கொண்ட அம்சங்கள் நிறைய உள்ளன.

மேலும், இந்த மூன்று புதிய சட்டங்களுக்கும் சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ மீறும் செயல் இது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய நியாய சன்ஹிதாவில் 9 புதிய குற்றங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 33 குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளன. 23 குற்றங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை கட்டாயம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 83 குற்றங்களுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதாவில் 531 பிரிவுகள் உள்ளன. இதுவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898-ல் 484 பிரிவுகள் மட்டுமே இருந்தன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in