டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

"சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்று சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

மதுரையில் ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்ட்ன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மதுரையில் மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்து வேண்டும்.

மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங் உரிமங்களை ஒன்றிய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசின் கவலைகளை, நீர்வளத் துறை அமைச்சர் கடந்த அக்டோபர் 3-ம் நாளிட்ட கடிதத்தின் மூலம் ஏற்கெனவே ஒன்றிய அரசுக்குத் தெரிவித்திருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக, ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், கடந்த நவம்பர் 2-ம் நாளிட்ட கடிதத்தில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதைத் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதற்கிடையே, கடந்த நவம்பர் 7 அன்று, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக ஒன்றிய சுரங்ககத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது. டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ. வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளதாகவும், அவற்றில் அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம் என்றும் இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது. இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதங்களை ஏற்படுத்தும்.

மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுரோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாகப் பாதிக்கும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மேற்கண்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மதுரையில் ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்று சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in