
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
இந்தப் பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் காரணமாக பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். சென்னை புறநகரை சென்றடைய பல மணி நேரங்கள் ஆகிறது. இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 86 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் வகையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் இந்தப் பேருந்து நிலையமானது கட்டப்பட்டது. 2,310 பேருந்துகள் வரை இயக்கப்படுவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தென் மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கபடவுள்ளது. இதற்கான பணி இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து, கடந்த 12-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு ஒரே நேரத்தில் 100 பேருந்துகள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டன.
அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் நேற்று (திங்கள்கிழமை) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்குத் திறந்துவைக்கிறார். அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர் பாபு ஆகியோர் திறப்பு விழாவில் முன்னிலை வகிக்கிறார்கள். தவிர அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.