முதல்வர் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

"கூட்டணிக் கட்சிகள் தேர்தலோடு கூட்டணியைத் நிறுத்திக்கொள்ளுங்கள். தேர்தலுக்குப் பிறகு திமுக அரசின் அட்டூழியங்களுக்குத் துணை போகாதீர்கள், மக்கள் மன்னிக்க மாட்டார்கள்."
முதல்வர் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
படம்: https://x.com/ANI/status
2 min read

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தைக் குறிப்பிடும் வகையில், அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்க வந்திருந்தார்கள். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தவுடன் விவாதிக்கலாம் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்தப் பிரச்னை குறித்து பேச வாய்ப்பு வழங்காவிட்டால், சட்டப்பேரவைத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற முறையில் மக்கள் பிரச்னையை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவது எனது தலையாய கடமை.

இதுதொடர்பாக பேச அனுமதி கேட்டபோது, சட்டப்பேரவைத் தலைவர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார். சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு நடந்திருக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேச அனுமதி கோரி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். ஆனால், அவரைக் கைது செய்யும் அளவுக்கு அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறார்கள்.

நீதிமன்ற வளாகத்தை ஒட்டியே கள்ளச்சாராயத்தை விற்பனை செய்திருக்கிறார்கள். அங்குதான் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாண்டுகளாகக் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால், இந்த ஆட்சியின் நிர்வாகத்தைப் பார்க்க வேண்டும், உளவுத் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆளுங்கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு கள்ளச்சாராயம் விற்பனைக்குத் துணை போகின்றது. இதனால், 50-க்கு மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறோம். இன்னும் பலர் அபாயக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதையெல்லாம் கண்டுகொள்ளாதது கூட்டணிக் கட்சிகள்.

25 ஆண்டுகளுக்குக் கூட்டணியில் தொடர்வோம் என்று காங்கிரஸ் சொல்கிறது. அப்படியென்றால், என்ன நடந்தாலும் கவலையில்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம்தான் முக்கியம். மக்களைப் பற்றி கவலைப்படாத கூட்டணிக் கட்சிகள்.

கம்யூனிஸ்ட் கட்சி மேம்போக்காகப் பேசுகிறார்கள். திருமாவளவன் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். ஆனால், அதில் என்ன பயன்?. கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. கூட்டணியைத் தேர்தலோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தேர்தலுக்குப் பிறகு திமுக அரசின் அட்டூழியங்களுக்குத் துணை போகாதீர்கள், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இத்தனை நடந்தபோதும்கூட, கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "இன்று காலை மற்றும் மாலை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள், கேள்வி நேரம் முடிந்தபிறகு அனுமதிக்கப்படலாம் எனும் வேண்டுகோளை ஏற்றும், பிரதான எதிர்க்கட்சி தனது கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதைப் பரிசீலித்து சட்டப்பேரவைத் தலைவர் தேவையானதை செய்ய வேண்டும்" என்றார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று வெளியேற்றப்பட்டவர்களின் தண்டனை ரத்து செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இருந்தபோதிலும், சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வைப் புறக்கணிப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in