தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதன்முறை. இந்த ஆய்வறிக்கையானது மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும், தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ. 2,78 லட்சமாக அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டின் விகிதம் 1.64 மடங்கு அதிகம்.
எல்லார்க்கும் எல்லாம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில், "சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…" என்பதையும் பதிவிட்டுள்ளார்.
ரூபாயிலுள்ள முதல் எழுத்தான 'ரூ'வை மையப்படுத்தி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதிநிலை அறிக்கையில் ரூபாயின் குறியீடு என்பது தேவநாகிரி எழுத்தில் இருந்தது. மொழி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ரூபாயின் குறியீடு என்பது 'ரூ' ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டபோது, துணை முதல்வரும் மாநில திட்டக் குழு துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன், நிதித் துறை துணைச் செயலர் செ.ஆ. ரிஷப் ஆகியோர் உடனிருந்தார்கள்.