
தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார்.
இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, இதற்கு மாற்றாக மாநில அரசு சார்பில் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அறிவித்தது. மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக கடந்த 2022-ல் ஓய்வுபெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையிலான குழுவில் கவ்வியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலை. துணை வேந்தர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள்.
மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை கடந்த 2023 அக்டோபரில் தயாரானது. கடந்தாண்டு ஜூலை 1 அன்று தமிழ்நாடு அரசிடம் மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாநில கல்விக் கொள்கை அறிக்கை பள்ளிக் கல்வி, உயர் கல்வி எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் முதலில் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் இதனை வெளியிட்டார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.
விழாவில் "தந்தை பெரியாரால் குலக் கல்வித் திட்டம் தமிழ்நாட்டிலிருந்து அழிந்தது. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த மாட்டோம் என இன்னொரு வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர் தான் முதல்வர் ஸ்டாலின்" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "இந்தாண்டு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் உயர் கல்வியில் சேர்ந்தவர்களுடைய எண்ணிக்கை 75%. இந்த எண்ணிக்கையை முறியடிக்கும் விதமாக அடுத்தாண்டு இன்னும் அதிகமாக வரும் என எதிர்பார்க்கிறேன். 100% பேர் உயர்கல்வியில் சேர்ந்தார்கள் என்பது தான் நம் இலக்கு." என்றார் முதல்வர் ஸ்டாலின்.
மாநில கல்விக் கொள்கை அறிக்கை வெளியீட்டுக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "11-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொறுத்தரை, தற்போது தொடரவில்லை. இனி தேவையில்லை என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.
MK Stalin | TN CM MK Stalin | State Education Policy | School Education Policy | Anbil Mahesh | Udhayanidhi Stalin | Deputy CM | School Education Minister