இபிஎஸ் தில்லி சென்றதும் தெரியும், யாரைச் சந்திக்கிறார் என்பதும் தெரியும்: முதல்வர் ஸ்டாலின்

"தில்லியில் சந்திக்கவிருப்பவரிடம் இருமொழிக் கொள்கை குறித்து இபிஎஸ் வலியுறுத்த வேண்டும்."
இபிஎஸ் தில்லி சென்றதும் தெரியும், யாரைச் சந்திக்கிறார் என்பதும் தெரியும்: முதல்வர் ஸ்டாலின்
2 min read

எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றிருப்பதாகவும் அங்கு யாரைச் சந்திக்கவிருக்கிறார் என்பதும் தெரியும், தில்லியில் சந்திக்கவிருப்பவரிடம் இருமொழிக் கொள்கை குறித்து எடுத்துக்கூற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்றுள்ளதாகவும் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமொழிக் கொள்கை குறித்த விவாதத்தின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளிக்கையில், எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணத்தைக் குறிப்பிட்டு பேசினார். தில்லியில் எடப்பாடி பழனிசாமி யாரைச் சந்திக்கப்போகிறார் என்ற தகவலும் வந்திருப்பதாக அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

"இருமொழிக் கொள்கை குறித்து என்ன உணர்வோடு தமிழ்நாடு இருக்கிறது என்பதைப் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக உள்பட பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதிகாரிகள் மூலம் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய அரசிடமிருந்து கடிதம் வந்ததாகவும் அந்தக் கடிதத்துக்கு விளக்கம் தந்தபோது அதில் ஒரு தவறான கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யக்கூடிய நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தயவு செய்து எந்தச் சந்தேகமும் வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தான் அவர்களுக்கு நாங்கள் விளக்கம் தந்துள்ளோம்.

பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பேசும்போது நாங்கள் என்றும் இந்த விஷயத்தில் (இருமொழிக் கொள்கை) ஒட்டுமொத்தமாக இருப்போம் என்று உறுதி தந்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை தில்லி சென்றிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. தில்லியில் யாரைச் சந்திக்கிறார் என்ற செய்தியும் வந்துள்ளது. அப்படி சந்திக்கும்போது இருமொழிக் கொள்கை குறித்து அவர் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை அவையின் மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் உயர்நிலைக் கொள்கையான இருமொழிக் கொள்கை குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளோடு தமிழ்நாடு அரசும் முழுமையாக உடன்படுகிறது என்பதை இம்மாமன்றத்தில் மீண்டும் உறுதி செய்கிறேன்.

தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. இதில் எந்த மாற்றமும் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமல்ல, நமது வழிக் கொள்கையும் அதுதான். எந்தப் பழிச்சொல் சொன்னாலும் என் உயிர்க் கொள்கையில் விட்டுத்தர மாட்டோம், விட்டுவிலக மாட்டோம் என்பதை மாமன்றத்தில் மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

ஹிந்தியா ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் தாய்மொழி காப்போம் என்ற உறுதியை பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் முன்னிலையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். 2 ஆயிரம் கோடி அல்ல 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று குறிப்பிட்டேன். மீண்டும் சொல்கிறேன் இது பணப் பிரச்னை அல்ல, நம் இனப் பிரச்னை" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in