அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் இன்று தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்ற 3.28 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த 2022-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் பெற்றுள்ளார்கள். வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்தாண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மாணவிகள் பயன்பெறுவதாக அரசு தரவுகளை முன்வைக்கிறது.
இதேபோல அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கும் தமிழிப் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000-ஐ அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் இன்று தொடக்கி வைத்தார். இதற்காக நடப்பாண்டில் ரூ. 360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.