புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வன உயிரின விழிப்புணர்வு மையம், நூலகம், நிர்வாகக் கட்டடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, நடைபாதைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min read

சென்னை கிண்டியிலுள்ள சிறுவர் பூங்கா ரூ. 30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கிண்டியிலுள்ள சிறுவர் பூங்கா சென்னையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்று. ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவதாக அரசு தரவுகள் கூறுகின்றன. இதுதவிர சென்னை மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று கடந்த 2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

ரூ. 30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட இந்தப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்தப் பூங்காவில்தான் 2,800 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்கள் அறிந்துகொள்ளும் வகையிலான எல்இடி மின் திரைகள், நூலகம், நிர்வாகக் கட்டடம், அழகிய நுழைவாயில், நீரூற்றுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, நடைபாதைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்காக உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்கும் வகையில் நவீன கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள இரண்டு சிற்றுண்டி கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், புதிய கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத்துடன் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in