அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க பயணத்துக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு மாற்றம் ஒன்றுதான் மாறாதது என முதல்வர் பதிலளித்தார்.
அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
2 min read

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5 லட்சம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜனவரி இறுதியில் ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 3,440 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்வதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

இந்த வரிசையில், ஜூலை இறுதியில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. இது ஆகஸ்டுக்கு தள்ளிப்போனது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தற்போது அமெரிக்கா புறப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் பயணத்தில் ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், செப்டம்பர் 2-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறார். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கவிருக்கிறார்.

“ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறார். செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது. செப்டம்பர் 14 அன்று தமிழ்நாட்டுக்குத் திரும்புகிறார்.

அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

"அரசு பயணமாக நான் அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வருகிற செப்டம்பர் 14 அன்று திரும்பி வருகிற மாதிரி என்னுடையப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நான் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாக தமிழ்நாடுக்குப் பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன.

இந்தப் பயணங்கள் மூலமாக 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ. 10,882 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ரூ. 990 கோடி முதலீட்டுக்கான ஐந்து திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 21 அன்று தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த ஐந்து திட்டங்களில் சிங்கப்பூர், ஜப்பான் நாட்டு நிறுவனங்களின் இரு திட்டங்களைத் தொடக்கி வைத்தேன். இந்த இரு நிறுவனங்களின் திட்டங்கள் மூலம் 1,538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 3,796 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன. கடந்த 21 அன்று நடைபெற்ற தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பானைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடையத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன்.

ரூ. 3,540 மதிப்பிலான மூன்று திட்டங்கள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன. ரூ. 438 கோடி மதிப்பிலான இரு விரிவாக்கத் திட்டங்கள், விரைவில் செயல்படுத்தக்கூடிய நிலையை அடையவுள்ளன.

ரூ. 2,100 கோடி மதிப்புடைய நான்கு திட்டங்களைப் பொறுத்தவரை, அந்தந்த நிறுவனங்களின் தொழில் முதலீட்டு சூழல் காரணமாக, சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது என்பதை ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்ட தான் இவற்றை இங்கு விரிவாகக் குறிப்பிட்டேன்.

இதனால்தான் இதுபோன்ற பயணங்கள் மிகமிக முக்கியமானவை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மூன்று ஆண்டு காலத்தில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 9.99 லட்சம் கோடி. இதன்மூலம், 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவற்றில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டன. மற்ற திட்டங்களும் அடுத்தடுத்து படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும்.

முதலீடுகளை ஈர்ப்பதற்கான என்னுடையக் கடந்த வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

தற்போதைய பயணம் மூலம் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை நான் தொடர்ந்து கண்காணித்து அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவேன். இந்த முதலீடுகள் தமிழ்நாட்டை 2030-க்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய இலக்கை விரைவாக அடைவோம்.

உலகின் கவனத்தைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ செல்கிறேன். கையெழுத்தான ஒப்பந்தங்கள் விவரம் குறித்து திரும்பி வரும்போது தெரிவிப்பேன். அமெரிக்கவாழ் தமிழர்களையும் சந்திக்கவிருக்கிறேன். இந்தப் பயணம் வெற்றிகரமானதாக அமையும்.

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய ரூ. 573 கோடியை ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும்.

இதுதொடர்பாக திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறார்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் நேரில் சந்தித்து சொல்லியிருக்கிறார்கள். நானும் இன்று கடிதம் எழுதியுள்ளேன், தொடர்ந்து வலியுறுத்துவோம்.

ரஜினியும் அமைச்சர் துரைமுருகனும் நீண்டகால நண்பர்கள். இருவரும் கூறிவிட்டார்கள். துரைமுருகன் கூறியதைப்போல நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், "மாற்றம் ஒன்றுதான் மாறாதது, காத்திருக்கவும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in