
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வீடு திரும்பினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த 21 அன்று காலை நடைப்பயிற்சியின்போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதை அவர் சமாளித்ததாகவே கூறப்படுகிறது.
தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போதும் தலைச்சுற்றல் இருந்ததால், சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 22 அன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில், முதல்வர் ஸ்டாலினுக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரிய பாதிப்பு எதுவும் அவருக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் இருந்தபடியே "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்வது உள்ளிப்பட்ட பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததால், தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைத்தும் இயல்பான நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அப்போலோ மருத்துவமனை இடையில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து முழுமையாகக் குணமடைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவமனை சற்று முன் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினும் அப்போலோ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் மாலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், "அப்போலோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாகக் குணமடைந்த முதல்வர் நலமாக உள்ளார். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MK Stalin | Apollo Hospitals | Tamil Nadu CM | CM MK Stalin | TN CM MK Stalin | MK Stalin health