இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்

பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

கிழக்குக் கடற்கரை சாலையில் நேற்றிரவு நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கும், மதுராந்தகம் அருகே இன்று காலை நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததற்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று, நேற்றிரவு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ராஜேஷ், யுவராஜ், மாதேஷ், ஏழுமலை ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். விக்னேஸ்வரன் என்பவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு விபத்து ஏற்பட்டது. முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஜெய் பினிஷா, அப்துல் அமீர், மிஷால், பைசல், ஓட்டுநர் சரவணன் ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

இந்த இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகன் அருகே இன்று காலை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அக்தர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in