காவிரிப் பிரச்னை: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு

"தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 1 டிஎம்சி தண்ணீரைத் திறக்க கர்நாடகம் மறுப்பு தெரிவிக்கும் நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் தில்லியில் கடந்த 11 அன்று கூடியது. அப்போது, ஜூலை 12 முதல் 31 வரை காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீருக்குப் பதில் 8 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகத்தின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இந்தக் கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்" என்றார் மு.க. ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in