இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்: டி.எம். கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஆதரவு!

"அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்!"
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)ANI

மியூஸிக் அகாதெமியின் சங்கீதக் கலாநிதி விருதுக்குத் தேர்வாகியுள்ள டி.எம். கிருஷ்ணாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டுக்கான சங்கீதக் கலாநிதி விருதை மியூஸிக் அகாதெமி அறிவித்துள்ளது. டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியூஸிக் அகாதெமியில் நடைபெறும் 2024 இசை மாநாட்டில் பங்கேற்காமல் விலகுவதாகப் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி மற்றும் காயத்ரி இருவரும் தெரிவித்தார்கள். திருச்சூர் சகோதரர்கள் உள்ளிட்டோரும் டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கர்நாடக இசை உலகில் இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் பதிவு:

"சிறந்த பாடகர் டி.எம். கிருஷ்ணா மியூஸிக் அகாதெமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம். கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!"

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in