கள்ளக்குறிச்சி: கூடுதல் நிவாரணங்களை அறிவித்த முதல்வர்

பெற்றோர் இருவரையோ, ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும்.
கள்ளக்குறிச்சி: கூடுதல் நிவாரணங்களை அறிவித்த முதல்வர்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூடுதல் நிவாரணங்களை அறிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 49 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே நிவாரணம் அறிவித்திருந்தது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

"கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். இதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சம் நிவாரண நிதியுடன் கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரையோ, ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும்.

  • பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றித் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயதை நிறைவு செய்யும் வரை மாதப் பராமரிப்புத் தொகையாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களுடையப் பெயரில் தலா ரூ. 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும். அவர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்தவுடன் இந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துவாடும் குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

  • பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

  • பெற்றோரை இழந்த குழந்தைகள் அவர்களுடைய விருப்பப்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் இல்லங்களில் சேர்க்கப்படுவார்கள்" என்றார் முதல்வர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in