தமிழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு எதிராக நடைபெற்றுவந்த பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று (செப்.02) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி, திருச்சி என்.ஐ.டி கல்லூரி, கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் அடுத்தடுத்து ஊடகங்களில் வெளியாகி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
மாணவிகளுக்கு எதிராக நடைபெற்ற இத்தகைய பாலியல் வன்முறை சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொது வெளியில் இருந்து அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
காணொளி வாயிலாக தலைமை செயலாளர் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.