
பொங்கல் பண்டிகை நேரத்தில் போராட்டத்தை தவிர்த்து, பேருந்துகளை இயக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வரும் என்றும், ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் வரும் 20-ம் தேதி முதல் போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதி திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்களை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நேரத்தில் நடைபெறும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலனுக்காக வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாகவே வாபஸ் பெற்றிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சரின் அறிவுரையைப் பெற்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும், கூடிய விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும என்றும் தெரிவித்திருந்தார்.
ஒரு மாத காலமாகவே வேலை நிறுத்தத்தில் இறங்கப்போவதாகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்திருந்தார்கள். பலகட்டப் பேச்சுவார்த்தைகள் பலன் தராததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தார்கள். தமிழக அரசின் போக்குவரத்துத் துறையும் போராட்டத்தின் பாதிப்பைக் குறைக்கும் விதமாக தற்காலிகமாக ஊழியர்களை நியமித்திருப்பதாக தெரிவித்திருந்தது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கம் எழுப்பியருந்த 6 அம்ச கோரிக்கைகளில் இரு கோரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், எஞ்சியவற்றை நிறைவேற்ற போதுமான நிதி கையிருப்பில் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 19-ம்தேதி போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் தலைமையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.
பொங்கல் பண்டிகை நேரத்தில் பொதுமக்களுக்கு நேர்ந்த இடைஞ்சல் தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. பத்து நாட்களுக்குள் பிரச்னைக்கு ஓரு தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பிரச்னை இன்னும் சிக்கலாகிவிடும் எனத் தெரிகிறது.