
தமிழ்நாட்டில் காவல் துறையினர் இனி தூங்கக் கூடாது என பாஜக தொண்டர்களிடம் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடப் போராட முயற்சித்த பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மாலை 6 மணி ஆகியும் விடுவிக்காததைக் கண்டித்து தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக, மார்ச் 17 அன்று சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதன்படி, சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த பாஜக இன்று திட்டமிட்டது. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் காவல் துறையினரால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்கள். அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள்.
விருகம்பாக்கத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழிசை சௌந்தரராஜன், மாலை 6 மணி ஆன பிறகும் விடுவிக்காததைக் கண்டித்துப் பேசினார். நேரம் மாலை 6 மணியைக் கடந்தபோதிலும் அடைத்து வைத்திருக்கும் பெண்களை விடுவிக்காமல் இருப்பது சரியா என அவர் காவல் துறையினருடன் கடுமையாக வாதிட்டார். அப்போது, அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெண் மயக்கமடைந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மிகவும் பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தான் மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்படாததைக் கண்டித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காவல் துறையினரால் விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, காவல் துறையினரை இனி தூங்கவிட மாட்டேன் என்றார்.
மேலும், "இனி தேதி சொல்லாமல்தான் போராட்டத்தை நடத்தப்போகிறோம். காவல் துறையின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். காவல் துறையினரிடம் தமிழக பாஜக சார்பில் இனி எந்தக் கடிதமும் கொடுக்க முடியாது.
அடுத்த ஒரு வாரத்தில் நடக்கக்கூடிய போராட்டம், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை மகளிரணி ஆணி அடித்து ஒட்டப்போகிறார்கள்.
ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருநாள் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் டாஸ்மாக் கடையை மூடி பூட்டுப்போடப்போகிறோம். இந்த இரு போராட்டங்களும் அடுத்த 15 நாள்களுக்குள் இரு தேதிகளில் நடக்கும்.
மார்ச் 22 அன்று ஒரு போராட்டம் சென்னையில் நடைபெற வாய்ப்பிருக்கிறது. காவல் துறையினர் பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத வரை பாஜக காவல் துறைக்கு மரியாதை கொடுக்காது. அறவழிப் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று முடிவான பிறகு, காவல் துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துள்ளோம்.
அடுத்த இரு போராட்டங்களும் கட்டாயமாக நடக்கும். காவல் துறையினர் முடிந்தால் எங்களைத் தடுத்துப் பார்க்கட்டும். இனி தமிழ்நாட்டில் சீருடை அணிந்த காவல் துறையினருக்குத் தூக்கம் இருக்கக் கூடாது. நமக்கு மரியாதை கொடுக்காத காவல் துறை இனி தூங்கக் கூடாது. விதவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் நடந்துகொண்டே இருக்க வேண்டும்" என்றார் அண்ணாமலை.