சித்தாந்தத்தில் ஆம்ஸ்ட்ராங் நேரெதிராக இருந்தாலும்..: அண்ணாமலை பேட்டி

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்த அண்ணாமலை, ஆறுதல் கூறினார்.
சித்தாந்தத்தில் ஆம்ஸ்ட்ராங் நேரெதிராக இருந்தாலும்..: அண்ணாமலை பேட்டி
படம்: https://x.com/annamalai_k

ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தேசிய அளவில் தீவிரப்படுத்தவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால், இந்தக் கொலை சம்பவம் நாடு முழுக்க கவனம் பெற்றது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மாலை ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

"ஆம்ஸ்ட்ராங் கொலை போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கக் கூடாது. இதுவரை நடந்ததில்லை. ஆனால், முதன்முதலாக சென்னையில் ஓர் அரசியல் தலைவர் பட்டப்பகலில், அவர் கட்டிக்கொண்டிருக்கக் கூடிய வீட்டு வாசலில், கூலிப்படையின் தாக்குதலில் அங்கேயே கொலை செய்யப்பட்டுள்ளார். இதை பாஜக வன்மையாகக் கண்டிப்பதோடு மட்டுமில்லாமல், தேசியத் தலைவர் நட்டா மற்றும் மூத்த தலைவர்கள் தொலைபேசி வாயிலாக இதுபற்றி கேட்டறிந்தார்கள்.

பாஜக மூத்த தலைவர்கள் 5 பேர் நாளை தில்லி செல்கிறார்கள். தில்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவிருக்கிறது. குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அதேசமயத்தில் இதற்கு ஒரு சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக பாஜக முன்னெடுத்துள்ளது.

பட்டியலின மக்களுக்கான தேசிய ஆணையத்தில் உள்ள தலைவர்களையும் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டியலின மக்கள், தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள், இதில் உச்சபட்சமாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 17 சம்பவங்களைக் (வேங்கை வயல் உள்பட) கொண்டுள்ள பட்டியலைச் சமர்ப்பிக்கவுள்ளோம்.

வி.பி. துரைசாமி தலைமையிலான குழு நாளை மாலை தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரைச் சந்தித்து இதுதொடர்பாக முறையிடவுள்ளது. இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, சிபிஐ விசாரணைக்கு வேண்டுகோள் விடுக்கப்போகிறோம்.

சித்தாந்தத்தில் நேர் எதிரே இருந்தாலும், இவர்கள் எங்களுடன் கூட்டணியில் இல்லாதபோதிலும், இந்தச் சம்பவத்தை பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இதை நாங்கள் தீவிரப்படுத்துகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்தியை இந்தியா முழுக்கக் கொண்டு சென்று, ஆம்ஸ்ட்ராங்குக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் ஜெ.பி. நட்டா உள்பட நாங்கள் அனைவரும் தீவிரமாக இருக்கிறோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலைப் பின்னணியில் இருப்பது யார், அரசியல் கொலையா என்பது குறித்தும் ஆராய வேண்டிய நேரமிது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறோம். இருந்தபோதிலும், முதல்வர் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழகத்தில் கூலிப்படைக்கு இடமில்லை என்கிற செய்தியை சொல்லியாக வேண்டும்" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in