கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெயலலிதா ஏன் ஓர் இந்துத்துவவாதி?: அண்ணாமலை விளக்கம்

"அதிமுகவினர் யாரேனும் இதை எதிர்க்கிறார்கள் என்றால் நாங்கள் விவாதத்துக்குத் தயார்."

தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏன் ஓர் இந்துத்துவவாதி என பல்வேறு சூழல்களில் அவர் எடுத்த நிலைப்பாட்டைக் கூறி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா ஓர் இந்துத்துவத் தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் பேசியது தமிழ்நாட்டு அரசியல் சூழலில் சலசலப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார், ஜாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்பும் அண்ணாமலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜெயலலிதா நிச்சயமாக ஓர் இந்துத்துவத் தலைவர் என்பதை தமிழிசையும் சொன்னார்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை ஜூன் 4-ல் பிரதமர் மோடி ஆட்சியமைக்கவுள்ளதாகக் கூறினார்.

"ஜூன் 4-ல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளார். இந்த முறை தமிழகத்திலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாஜக வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள்.

இதுவரை 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்டத்தில் இன்னும் 57 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

பாஜக 370 இடங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்ந்து 400 என்ற இலக்கை நிச்சயம் அடையவுள்ளோம். கள நிலவரங்கள் இதைத்தான் கூறுகின்றன.

இதுவரை 330 இடங்களை பாஜக கடந்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. கடைசிக் கட்ட வாக்குப்பதிவில் 370 என்ற இலக்கையும் அடைந்துவிடுவோம்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என இலக்கை வைத்துள்ளோம். முழுமையான கள ஆய்வுக்குப் பிறகு சொல்கிறோம். இரட்டை இலக்கு என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவவாதி. இந்துத்துவம் என்பது மதம் சார்ந்தது அல்ல, வாழ்வின் முறை. அதிமுகவினர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என ஜெயலலிலா 1984-ல் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ராமர் கோயிலைப் பற்றி 1992-ல் ஜெயலலிதா பேசும்போது, கரசேவை என்பது தவறான சொல் கிடையாது என்கிறார். மேலும், பாபர் மசூதி இடிப்புக்காக பாஜக அரசு கலைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறினார்.

ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக 1993-ல் அதிமுக தொண்டர்களிடம் 23 லட்சம் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார் ஜெயலலிதா. இதன் நிறைவு விழாவில் எல்.கே. அத்வானி பங்கேற்கிறார்.

2003-ல் ராமர் கோயிலை இந்தியாவில் கட்டவில்லையென்றால், பாகிஸ்தானில் கட்டப்படும் என்றார் ஜெயலலிதா. ஆனால், இன்றைய அதிமுக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள். மூட்டு வலி, இடுப்பு வலி என்பதால் ராமர் கோயிலுக்குச் செல்ல மாட்டேன் என்கிறார்கள்.

பொது சிவில் சட்டம் பற்றி ஜெயலலிதா 2003-ல் கூறுகையில், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் இது மிகவும் அவசியமானது என்றார். மார்ச் 2012-ல் மத்திய அரசிடம் சொல்லும்போது, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

1991-ல் தமிழ்நாட்டில் வேதபாட சாலையை உருவாக்கினார் ஜெயலலிதா. ஆனால், இதற்குள் நான் செல்லவில்லை. அதிமுகவினர் யாரேனும் இதை எதிர்க்கிறார்கள் என்றால் நாங்கள் விவாதத்துக்குத் தயார்.

1993-ல் சென்னையில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முழுமையாகக் கட்டிக்கொடுப்பதாக ஜெயலலிதா சொன்னார். அரசுப் பணத்தில் எங்களுக்கு ஆர்எஸ்எஸ் அலுவலகம் வேண்டாம் என அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

இப்போது கூறுங்கள், ஜெயலலிதாவை இந்துத்துவவாதி என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது" என்றார் அண்ணாமலை.

logo
Kizhakku News
kizhakkunews.in