சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது: முதல் நாள் நிகழ்வுகள் | TN Assembly |
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரியில் நடைபெற்றது. இரண்டாம் கூட்டம், மார்ச் மாதத்தில் தொடங்கியது. அப்போது 2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் அக்டோபர் 17 வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இன்று காலை 9:30 மணிக்குச் சட்டப்பேரவை கூடியது. அப்போது மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உட்பட முன்னாள் உறுப்பினர்கள் 8 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கேரள முன்னாள் முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஷிபு சோரன், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோரின் மறைவுக்கும் இறங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேரவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்தபடியாக நாளை (அக்.15) கூடுதல் மானியக் கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்பட்டு, அக்டோபர் 16 அன்று விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 17 அன்று விவாதங்களுக்கு பதில் அளிக்கப்படும்.
முன்னதாக பாமக சட்டமன்ற கொறடா பதவியில் இருந்து அருள் மற்றும் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே. மணி ஆகியோரை நீக்கக் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த கடிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.