

2026-க்கான தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9:30 மணி அளவில் பேரவை தொடங்கியதும் ஆளுநர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவருக்கு மரபுப்படி மரியாதை அளிக்கப்பட்டது.
உரையை வாசிக்காத ஆளுநர்
பிறகு சபாநாயகரின் இருக்கையில் ஆளுநர் ஆர். என் ரவி அமர்ந்த நிலையில் உரையை வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. அதற்கடுத்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. அதற்காக சிறிது நேரம் ஆளுநர் காத்திருந்தார். அப்போது உரையைத் தொடங்குமாறு சபாநாயகர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் உரைக்குப் பின் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று கூறப்பட்ட பின்னரும் ஆளுநர் தனது உரையை வாசிக்க மறுத்து வெளிநடப்பு செய்தார்.
உரை வாசிக்கப்பட்டதாகத் தீர்மானம்
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: ஆளுநர் வேண்டுமென்றே அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலைச் செய்துள்ளார். இது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த சட்டப்பேரவையும் அதன் மாட்சிமையையும் அவமதிக்கும் செயலாகும். ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று அண்ணா குறிப்பிட்டு, அதைக் கருணாநிதி வழிமொழிந்த போதிலும் அவர்கள் இருவரும் அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்கத் தவறியதில்லை. இந்த அரசும் அதிலிருந்து விலகியதில்லை. எனினும் ஆளுநர் ஏற்கெனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது.
ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராகவும் மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராகவும் உண்மையைப் பேசுபவராகவும் இருக்க வேண்டும். மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு உடையவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசமைப்பு சட்டமும் எதிர்பார்க்கிறது. ஆனால் நமது ஆளுநர் அதற்கு மாறாகச் செயல்படுகிறார்.
ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே அவரால் படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது. அவ்வாறே அவைக்குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம்பெறலாம். மேலும் மரபுவழி நிகழ்வுகளுக்காக ஆளுநர் உரையின் தமிழ் வடிவம் சபாநாயகரால் வாசிக்கப்படலாம் என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். இதை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்” என்றார்.
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் உரையை வாசித்தார். அப்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இடம்பெற்றிருந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
The Governor walked out without delivering his address as the Tamil Nadu Legislative Assembly for 2026 began today.