அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 நபர்கள் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2011 முதல் 2016 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் வைத்திலிங்கம். அப்போது தாம்பரத்தை அடுத்து உள்ள பெருங்களத்தூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்குத் திட்ட அனுமதியை வழங்க வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தற்போது புகாரளித்துள்ளது.
அறப்போர் இயக்கம் அளித்த புகாரில், ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனம் சார்பில் 57 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதியைப் பெற, ஸ்ரீராம் குழுமத்தின் பாரத் கோல் கெமிக்கல் நிறுவனத்தின் மூலம் வைத்திலிங்கத்துக்கு ரூ. 27 கோடி லஞ்சம் கைமாறியதாக ஆதாரத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், லஞ்சமாக பெற்ற பணத்தில் திருச்சி மாவட்டம் பாப்பாகுறிச்சியில் ரூ. 24 கோடி மதிப்பிலான நிலத்தை வைத்திலிங்கம் வாங்கியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டது அறப்போர் இயக்கம்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் அண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு உள்ளிட்ட 11 நபர்கள் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.