
கரூரில் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த இடத்துக்கு 50 மீட்டருக்கு முன்பே காவல் துறையினரால் விஜய் நிறுத்தப்பட்டார் என்று ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
"இந்த நிகழ்வு தொடர்பாக உடனடியாக என்னைக் கிளம்பச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, நேற்று இரவு உடனடியாக கரூருக்கு வந்தேன். இங்கு பல இடங்களில் பத்திரிகை நிருபர்கள் சார்பில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
முதலில், ஏன் இந்தப் பகுதியை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள், முன்பு கேட்டிருந்த பகுதியை ஏன் வழங்கவில்லை என்று கேட்டார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், அவர்கள் செப்டம்பர் 23 அன்று அளித்த மனுவில் கேட்ட இடம் லைட்ஹவுஸ் ரவுண்டானா எனும் பகுதி. அந்த லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம். அங்கு சென்று பார்த்தாலே அதன் தன்மை புரியும்.
ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்கும், மறுபக்கம் வலது புறத்தில் அமராவதி ஆறும், அதற்கு மேல் பெரிய பாலமும் உள்ளது. எனவே, அந்த இடத்தில் இத்தகைய அடர்த்தியான கூட்டத்தை வைத்து நிகழ்ச்சியை நடத்துவது கடினம். அதனால், காவல் நிலையத்தில் உடனடியாக நிராகரிப்பு செயல்முறை தயாரிக்கப்பட்டது.
அதை அளித்தபோது அவர்கள் அடுத்த நாள் வலியுறுத்தி கேட்ட இடம், அந்த ரவுண்டானாவில் அனுமதி அளிக்க வேண்டும் அல்லது உழவர் சந்தை மைதானத்தை வழங்க வேண்டும் என்று கேட்டார்கள். அந்த உழவர் சந்தை மைதானமும் குறுகலான இடம். அங்கு கூட இத்தகைய கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்துவது சிரமமாக இருந்தது.
அதன் பிறகு, வேலுச்சாமிபுரத்தில் ஒரு கட்சி சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது சுமார் 12,000 முதல் 15,000 பேர் கலந்து கொண்டனர். அது அரசு அங்கீகரித்த இடம். அந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்தலாம் என்று காவல் துறை பரிந்துரை செய்தது. ஆரம்பத்தில் அவர்கள் அதை மறுத்து, பின்னர் தாங்களே மனு அளித்து, தாங்களே அனுமதி பெற்று, தாங்களே உத்தரவைப் பெற்றார்கள்.
எனவே, இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் மனு அளித்த நிலையில், அவர்களுடன் ஆலோசித்துப் பேசிய பின்னரே நாங்கள் அனுமதி வழங்கினோம்.
அடுத்ததாக பலர், காவல் துறை பாதுகாப்பு அளவு மிகவும் குறைவாக இருந்தது என்று கேள்வி எழுப்பினார்கள். பொதுவாக கூட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான அளவுகள் காவல் துறையில் உள்ளன.
ஒரு தளர்ந்த கூட்டத்தில் 10 சதுர அடிக்கு ஒரு நபர் நிற்கலாம். நெருக்கமான கூட்டத்தில் 6 முதல் 7 சதுர அடிக்கு ஒரு நபர் நிற்கலாம். அடர்த்தியான கூட்டத்தில் 4.5 முதல் 5 சதுர அடிக்கு ஒரு நபர் நிற்கலாம். இதை கணக்கிட்டு பார்க்கும்போது, கூட்டத்தை குறைந்த ஆபத்துடையது, மிதமான அளவில் ஆபத்து கொண்டது, அதிக ஆபத்து கொண்டது பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படும்.
பொதுவாக, குறைவான ஆபத்து இருக்கும் கூட்டத்துக்கு 250 முதல் 300 பேருக்கு ஒரு காவலர் பணியமர்த்தப்படுவார். மிதமான அளவில் ஆபத்து உள்ள கூட்டம் என்றால் 100 முதல் 150 பேருக்கு ஒரு காவலர்,அதிக ஆபத்து கொண்ட கூட்டத்திற்கு 50 பேருக்கு ஒரு காவலர் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த நிகழ்வுக்காக 500 காவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மூன்று கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர்கள், நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 17 காவல் ஆய்வாளர்கள், 58 காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோரைச் சேர்த்து மொத்தம் சுமார் 500 பேர் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மத்திய மண்டல ஐஜி இங்கிருந்தே முகாமிட்டு முழுமையாகக் கண்காணித்து வந்தார்.
இதுவரை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்பட்ட பிற மாவட்டங்களிலான காவல் துறை பணியமர்த்தப்பட்ட நிலவரத்தைச் சொல்கிறேன். திருச்சி மாநகரில் முதலில் நிகழ்ச்சி நடந்தபோது 650 பேர் பணியமர்த்தப்பட்டார்கள். காரணம், மாநகரத்தையும் விமான நிலையத்தையும் ஒருசேர கையாள வேண்டியிருந்தது.
அரியலூர் மாவட்டத்தில் 287, பெரம்பலூரில் 480, நாகப்பட்டினத்தில் 410, திருவாரூரில் 413, நாமக்கலில் 279, கரூரில் 500 காவலர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். நாமக்கலிலும் நேற்றே வெப்பம் காரணமாக சுமார் 34 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் இன்னும் கண்காணிப்பில் உள்ளனர்.
அடுத்ததாக, ஆம்புலன்ஸ் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அனுமதி அளிக்கும் போது போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. அதன்படி, அவர்களே காவல் துறை குடியிருப்பு அருகே இரண்டு ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
நிகழ்வு நடந்ததும், கூட்டநெரிசல் நிகழ்ந்ததாக முதலில் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்புங்கள் என்று சொன்ன பிறகு, பின்னர் உள்ளூர் காவல் துறையினர் தகவலளித்து, அமராவதி மருத்துவமனையிலிருந்து பல ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டன.
அடுத்ததாக கல்லெறிதல் நடந்ததாகக் கூறப்பட்டது. எங்கள் விசாரணையின்படி இதுவரை அத்தகைய தகவல் எதுவும் இல்லை.
பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தவுட்டுப்பாளையத்திலிருந்து கரூர் ரவுண்டானாவுக்கு வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. இது வழக்கமாக 30 நிமிடத்தில் கடக்கக்கூடிய தூரம். ஏற்கெனவே, நாமக்கலில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் தாமதமாகத் தொடங்கியதால் சுமார் நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. அதனால், அங்கு காத்திருந்த மக்கள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாலை 4.15 மணிக்கு நாமக்கலிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். தவட்டுபாளையத்திலிருந்து கிளம்பி ரவுண்டானா சந்திப்புக்கு வரும்போது, மாலை 6 மணி ஆகிவிட்டது. கரூருக்கு வந்தபோது தலைவர் (விஜய்) மக்கள் நடுவே கையசைத்து சென்றார். அதன் பின் மக்கள் அவரை நேரில் காண ஆவலுடன் கூட்டமாக வண்டியைப் பின்தொடர்ந்தார்கள். வண்டி சென்றடைய சுமார் ஒரு மணி நேரம் எடுத்தது.
தலைவரைப் பார்க்க வேண்டும் என்று இரு புறத்திலிருந்தும் கூட்டம் நகரும்போது ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதை நிச்சயமாக விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் வந்தபோது 137 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தார்கள். ஆனால் கூட்டம் ஒழுங்காகவும் சீராகவும் இருந்ததால் பிரசனை ஏதுமின்றி முடிந்தது.
ஆனால் இப்போது, ஆம்புலன்ஸில் காயமடைந்தவர்களை வெளியே எடுக்கும்போது கூட சிரமம் ஏற்பட்டது. அதேபோல கட்சித் தலைவரை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டது. எந்தவொரு பாதுகாப்பு அமைப்பாக இருந்தாலும் சரி, அதில் யார் கலந்துகொள்கிறார்களோ அவர்களுடைய ஒத்துழைப்பும் காவல் துறைக்குத் தேவை.
எவ்வளவு அதிகப்படியான காவல் படையை நியமித்தாலும், 10,000 முதல் 20,000 பேர் கூடினால் காவல் துறையினரால் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற சூழல்கள் வரும் கண்டிப்பாக. அப்போது நாம் கொஞ்சம் கை வைத்துப் பேசி சமாதானமாகப் பேசி மெதுவாகத் தள்ளி தான் கொண்டு வர முடியும்.
கரூர் டவுன் டிஎஸ்பி தான் மேம்பாலத்திலிருந்து பேசும் இடம் வரை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசி பேசி அழைத்து வந்துள்ளார். பேசும் இடத்துக்கு 50 மீட்டர் தூரத்துக்கு முன்பே, "இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம், கூட்டம் அதிகமாக உள்ளது" என்று டிஎஸ்பி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் ஏற்பாட்டாளர்கள் மறுத்து, "நாங்கள் அந்த இடத்தில்தான் பேச வேண்டும். அப்போது தான் கேட்கும்" என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி வண்டிகள் மெதுவாக முன்னேற, கூட்டம் இருபுறமும் நகர்த்தப்பட்டது.
அந்த இடத்தை அடைந்த பிறகு சுமார் 10 நிமிடங்கள் தலைவரை யாராலும் பார்க்க முடியவில்லை. இதனால், மக்கள் ஆவலுடன், சற்றே பதற்றத்துடன் நடந்துகொண்டார்கள். எனவே, ஒரு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதன்பிறகு, என்ன நடந்தது என்பதைக் காணொளிகளைப் பார்த்த பிறகு தான் தெரியவரும்.
காலை உணவு, மதிய உணவு சாப்பிடாமல் வந்துள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு வசசியும் தண்ணீர் வசதியும் இல்லை. அங்கேயே காத்திருந்திருக்கிறார்கள்.
இதனால் மக்கள் அதிக நேரம் பொறுமையாகக் காத்திருந்ததால், தலைவரின் வருகை தாமதமடைந்ததும் அவர்கள் அமைதியிழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் காணொளி, சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம் விசாரணையில் வெளிவரும்.
ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால், முழு உண்மையை அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே காவல் துறை சார்பாக மேலும் கருத்து கூறுவது சரியல்ல.
அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து காவலர்கள் கொண்டுவரப்பட்டனர். ஐஜி நேரடியாக இருந்தார். ஒரு காவலர் 40 பேருக்குச் சமம். நாங்கள் 20 பேருக்கு ஒரு காவலரை நியமித்திருந்தோம்.
தற்போது விசாரணையில், அனுமதிக்காக மனு அளித்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இது ஆரம்ப நிலையிலே உள்ளது. விரிவான தகவல்கள் கிடைத்த பின் மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்" என்றார் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.
Karur | Karur Stampede | ADGP | TN ADGP Devasirvatham | Vijay | TVK Vijay |