டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 1928-ல் அன்றைய மெட்ராஸ் (சென்னை) நகரத்தில் தொடங்கப்பட்ட மெட்ராஸ் மியூசிக் அகாடமி, ஒவ்வொரு வருடமும் பல இசைக் கச்சேரிகளையும், குறிப்பாக டிசம்பர் மாதத்தில் சென்னை இசை திருவிழாவையும் நடத்திவருகிறது.
இந்நிலையில், கடந்த 17 மார்ச் 2024-ல் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதையும், பேராசிரியர் பாரசாலா ரவி மற்றும் கீதா ராஜா ஆகியோருக்கு சங்கீத கலா ஆச்சாரியா விருதையும், திருவையாறு சகோதரர்கள் மற்றும் ஹெச்.கே. நரசிம்ஹமூர்த்தி ஆகியோருக்கு டி.டி.கே விருதையும் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார் மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி.
இந்நிலையில், மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு எதிராக தொடர்ந்து அவதூறான கருத்துகளை தெரிவித்து வரும் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, அவரது பெயரில் வழங்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதை வழங்கத் தடை விதிக்குமாறு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 2024-ம் வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருதை மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது எனவும், அதேநேரம் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் சங்கீத கலாநிதி விருதை வழங்கலாம் எனவும் மெட்ராஸ் மியூசிக் அகாடமிக்கு உத்தரவு பிறப்பித்தார்.