யுபிஎஸ்சி தேர்வில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி: எம்.பி. சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு!

பாஜக அரசு தமிழகத்தையும் பிற ஹிந்தி பேச மாநிலங்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தேர்வுகளை வடமாநிலங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றிவிட்டது.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி: எம்.பி. சசிகாந்த் செந்தில் குற்றச்சாட்டு!
2 min read

யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வு ஹிந்தி தெரிந்த மாணவர்களுக்கு பலனளிக்கும் வகையிலும், ஹிந்தி தெரியாத தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் வகையிலும் பாஜக அரசால் மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் திருவள்ளூர் பாஜக எம்.பி. சசிகாந்த் செந்தில்.

தமிழகத்தில் இருந்து கிராமப்புற மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறும் சதவீதம் குறைந்துள்ளதை ஒப்புக்கொள்வதாகவும், அதற்குக் காரணம், திமுக காங்கிரஸ் கூட்டணி, தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளை முன்னிறுத்தி, அரசுப் பள்ளிகளைச் செயலிழக்கச் செய்திருப்பதுதான் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக, அண்ணாமலைக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பி திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`மும்மொழிக்கொள்கை குறித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் – தமிழ்நாட்டின் இருமொழிக் கல்வி முறை கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. பல வடமாநிலங்களைவிட கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருக்கும்போது, தோல்வியடைந்த கல்விமுறைகளை நம்மீது கட்டாயமாகத் திணிப்பதன் நோக்கம் என்ன? என்று செய்தியாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு, யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப்பணித் தேர்வு குறித்து பதில் கூறியுள்ளார் அண்ணாமலை. மும்மொழிக் கொள்கை என்பது வடமாநிலங்களை முன்னேற்றம் அடையச்செய்யும் திட்டம் அல்ல. அது மொழித் திணிப்பு வழியாக கலாச்சார ஒழிப்பு என்ற பயங்கர செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக கல்விக் கொள்கையில் எந்தவொரு முக்கியமான மாற்றங்களும் இல்லை. ஆனால், தமிழக மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெறும் எண்ணிக்கை ஏன் மோசமாகக் குறைந்தது? இதற்கான பதில் ஒன்று மட்டுமே – மோடியின் பாஜக அரசு தமிழகத்தையும் பிற ஹிந்தி பேச மாநிலங்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தேர்வுகளை வடமாநிலங்களின் வசதிக்கு ஏற்ப மாற்றிவிட்டது.

குடிமைப்பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வில், கடந்த 2011-ல் மத்திய காங்கிரஸ் அரசு CSAT தாளை அறிமுகப்படுத்தியபோது, அது கட்டாய தகுதி தேர்ச்சித் தாளாக இருக்கவில்லை.  2015-ல் மத்திய பாஜக அரசு CSAT தேர்வை தகுதித் தேர்வாக மாற்றியது பெரிய மோசடி. இதனால் நடந்தது என்ன?

இந்த CSAT தாளில் உள்ள முக்கியமான `புரிதல் (Reading Comprehension) பகுதி’ ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ளது. ஹிந்தி மாணவர்களுக்கு புரியும் வகையில் அது ஹிந்தியில் இருக்கிறது, ஆனால் அதையே தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இது நியாயமா?

எதனால் CSAT தாள் CAT (Common Admission Test) தேர்வுபோல மிகப்பெரிய அளவில் கடினமானதாக மாற்றப்பட்டது? இது ஐஏஎஸ் தேர்வா? அல்லது எம்பிஏ தேர்வா? அதுவரை முக்கியமானதாக இருந்த இந்திய அரசியலமைப்பு, வரலாறு, சமூகநீதி போன்றவற்றில் சிறந்து விளங்கிய தமிழகம் மற்றும் பிற மாநில மாணவர்கள், இந்த CSAT தாள் சிக்கலில் சிக்கி, தேர்வில் தோல்வியடைய வைக்கப்பட்டார்கள்.

General Studies தாளில் தேர்ச்சியடைய 105 மதிப்பெண்கள் தேவைப்படும்போது, அதில் 130+ மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களும், CSAT தாளில் தேர்ச்சி பெற முடியாமல் வெளியே தள்ளப்பட்டார்கள். இந்த தேர்வு ஒரு அறிவு முறைமையைச் சோதிப்பதற்கானதா? அல்லது ஹிந்தி பேசாத மாணவர்களை போட்டியிலிருந்து நீக்குவதற்கானதா?

இந்தியாவில் இருப்பது ஒரு மாநிலம், ஒரு மொழி மட்டுமல்ல! தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிடம் – போன்ற மாநிலங்களும் இதே விவகாரத்தில் மத்திய அரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், கீழ்கண்ட கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் கூறவேண்டும்:

ஏன் மத்திய பாஜக அரசு CSAT தாளில், மொழி மற்றும் சிக்கலான aptitude-based hurdle-களை உருவாக்கி, வடமாநில மாணவர்களுக்கு மட்டுமே பயன்தரும் வகையில் மாற்றம் செய்தது?

ஏன் குடிமைப்பணித் தேர்வில் மற்ற மாநில மாணவர்களை புறக்கணித்து, ஒரு மையத்துவ அரசுத் தேர்வு முறையை நடத்தியது?

ஏன் குடிமைப்பணித் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வெகு அளவில் குறைந்துள்ளது?

இது குறித்துப் பேச முடியாமல், சமூக வலைதளங்களில் உங்கள் அடியாட்களை தனி நபர் தாக்குதலுக்கு அனுப்பாமல், நேரடியாக பதில் தரவும். தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு அரசியலை விளையாட்டாக நினைப்பது உங்களின் தவறு. தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் தமிழர்களுக்கெதிராக செயல்படும் எந்த அரசியலுக்கும் எதிராகவே அந்த அரசு இருக்கும்.

ஹிந்தியில் எழுதினால் வெற்றி, தமிழில் எழுதினால் தோல்வி – இதை நியாயம் என்றா சொல்கிறீர்கள்? இடஒதுக்கீட்டில் படித்து, ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று, அந்த இடஒதுக்கீட்டையே எதிர்க்கும் நீங்கள் இதை நியாயப்படுத்துவதில் வியப்பில்லை! மோடியின் அடிமையாக இருந்தால், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா?

உங்களின் அரசியலையும் உங்களின் தலைவரையும் காப்பாற்ற மட்டும் பேசாமல், உண்மையைப் புரிந்து, நேரடியாக பதில் சொல்லுங்கள்! தமிழர்கள் உங்களின் ஒவ்வொரு தவறான முடிவையும் நினைவில் வைத்திருக்கிறார்கள் – இந்த யுபிஎஸ்சி விவகாரமும் அதில் ஒன்று!

தமிழ்நாட்டில், தமிழனாய் பிறந்து இருந்தாலும், மோடியை சந்தோஷப்படுத்தும் ஒரே நோக்கில் தமிழர் நலனுக்கு எதிராக செயற்படும் அண்ணாமலை ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து, தமிழர் மேல் நடத்தும் ஒரு திட்டமிட்ட மொழி, இன மற்றும் கல்வி அடக்குமுறை. தமிழர் விரோதி பாஜகவை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்!’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in