
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை பிடிக்க, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இன்று (ஜூலை 18) தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியான ஆரம்பாக்கத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த வாரம் சனிக்கிழமை நண்பகல் 1 மணியளவில் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்த ரயில் பாதையைக் கடந்து தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சிறுமியை பின்தொடர்ந்து ஒரு மர்ம நபர் சென்றுள்ளார். அந்த சமயம் அங்கே ஆள் நடமாட்டம் இல்லாததை ஒட்டி சிறுமியை பலவந்தமாக அருகிலிருந்த மாந்தோப்பிற்கு தூக்கி சென்று அந்த மர்ம நபர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்துள்ளார்.
சுதாரித்துக்கொண்ட சிறுமி, அந்த மர்ம நபரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அங்கிருந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு தனக்கு நேர்ந்தது குறித்து பாட்டியிடம் சிறுமி தெரிவித்தததை அடுத்து, அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறை விசாரணையில் சிறுமியை மர்ம நபர் தூக்கிச் செல்லும் காட்சி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலிருந்த சிசிடிவியில் பதிவானது கண்டறியப்பட்டது.
ஆனால் மர்ம நபரை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளரிடம் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
சம்பவம் நடைபெற்று ஒரு வார காலம் ஆகியும் குற்றவாளி கண்டறியப்படாததால் சிறுமியின் உறவினர்கள் காவல்துறைக்கு கடும் கண்டத்தைத் தெரிவித்தனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் மேற்பார்வையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க இன்று (ஜூலை 18) தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.