திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் கொலை: ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர்! | MK Stalin

அடிதடி பிரச்னையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப் படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று...
திருப்பூரில் காவல் உதவி ஆய்வாளர் கொலை: ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர்! | MK Stalin
1 min read

திருப்பூரில் கொல்லப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் சண்முகவேல் (57). இவரும் ஆயுதப் படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் ஆகஸ்ட் 5 அன்று இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சிக்கனூத்து அருகில் தனியாரின் தோட்டத்துச் சாலையில் நடந்த அடிதடி பிரச்னை குறித்து தகவல் அறிந்ததும், இதை விசாரிப்பதற்காகச் சம்பவ இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது அடிதடி பிரச்னையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப் படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள்.

இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சண்முகவேல் குடும்பத்தினர் மற்றும் உடன் பணிபுரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:

"சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin | TN CM MK Stalin | Tiruppur SSI | Tiruppur Special Sub Inspector | Shanmugavel | SSI Shanmugavel | 1 Crore

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in