திருநெல்வேலியில் மர்ம நபர்கள் இளைஞரின் பூணூலை அறுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டிவிஎஸ் நகரில் கடந்த 21 அன்று மாலை 4.30 மணியளவில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து அகிலேஷ் என்ற இளைஞரின் பூணூலை அறுத்ததாகக் கொடுத்த புகாரின்பேரில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது.
இப்புகார் தொடர்பாக காவல் துறையினரால் அன்றைய தேதியில் அகிலேஷ் என்பவர் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட இடத்திலும் மற்றும் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட சாலையிலும் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேற்படி பதிவுகளில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்துக்கு இடமாக இரு சக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து பூணூலை அறுத்ததாகப் புலப்படவில்லை.
மேற்படி சிசிடிவி கேமிரா பதிவுகளைப் பார்வையிட்டதிலிருந்தும், சம்பவ இடத்திலிருந்த சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்துச் சென்றதாகக் காவல் துறை விசாரணையில் புலப்படவில்லை" என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.