
தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் வரும் ஜன.18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,
`கிழக்கு இலங்கையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜன.13) தொடங்கி வரும் 15-ம் தேதி வரை தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக வரும் 14-ம் தேதியில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து 16 மற்றும் 17-ல் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் (ஜன.13), நாளையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று தொடங்கி ஜன.16 வரை, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’.