
இந்தியாவின் புலிகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் விதமாக, முதுமலை புலிகள் காப்பகத்தில் 2023-2024-ம் ஆண்டில் 129 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, 2024-2025-ம் ஆண்டில் 28% உயர்ந்து 165 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (ஜூலை 29) சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுவதால், முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த உயர்வு வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றியது, வேட்டையாடுதலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவை இத்தகைய உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
688 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் கிட்டத்தட்ட 85 சதுப்பு நிலங்கள் உள்ளன, அவை விலங்குகளுக்கான முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன.
`நாங்கள் ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றாமல் இருந்திருந்தால், அது இந்த சதுப்பு நிலங்களில் பரவி விலங்குகளின் முக்கிய வாழ்விடங்களை அழித்திருக்கும். இந்த சதுப்பு நிலங்களின் மேலாண்மை, பாதுகாப்பு முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளது’ என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பழங்குடியின மக்களின் பங்களிப்புடன், லந்தானா காமராவை (உண்ணிச்செடி) என்கிற ஆக்கிரமிப்பு தாவரத்தை அகற்றும் பணி, முதுமலை வனவிலங்கு காப்பகத்தின் மையப் பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
`புலிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற முக்கிய வேட்டையாடும் உயிரினங்கள், செந்நாய் மற்றும் கழுதைப்புலி போன்ற இணை வேட்டையாடும் உயிரினங்கள் ஆகியவற்றின் இருப்பு மூலம் சுற்றுச்சூழல் சமநிலை பராமரிக்கப்படுகிறது. மேலும், இறந்த விலங்குகளை அகற்றுவதில் கழுகுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன’ என்று மூத்த வன அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.