
உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் எதிர்ப்பேன், பெரியார் தேவை என்று நினைப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிக்கொள்ளலாம் என்று பேசியுள்ளார் சீமான்.
இன்று (பிப்.10) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது,
`பெரியாருக்கா வாக்கு? காந்திக்குதான் வாக்கு. திராவிடத்தை பேசும் பெருமக்கள் காந்தியைப் போற்றவேண்டும். பெரியாரை சீமான் தவறாகப் பேசிவிட்டார் என்று கூறி உங்களால் வாக்கு கேட்க முடிந்ததா?
என் மொழிக்காக, எல்லை மீட்புக்காக, நிலப் பாதுகாப்பிற்காக ஒராயிரம் சொந்தப் பெரியார் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த பெரியார் தேவையில்லை. பிரபாகரனின் இல்லத்தில் சுபாஷ் சந்திரபோஸ், எம்.ஜி.ஆர் படங்கள் இருந்தன, பெரியார் படம் இல்லை. அவர் எப்போதும் பெரியார் குறித்துப் பேசியது இல்லை.
பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் சாகடிக்கவேண்டும் என்று திராவிடம் நினைத்தது. உலகமே பெரியாரை ஏற்றுக்கொள்ளட்டும், ஆனால் நான் எதிர்ப்பேன். யார் கொண்டாடினாலும் ஏற்றுக்கொண்டாலும் நான் எதிர்ப்பேன். எங்களுக்குப் பெரியார் தேவையில்லை, குறிப்பாக எனக்குத் தேவையில்லை.
என்னைப் பின்பற்றும் என் தம்பிகள் பெரியார் தேவை என்றால் கட்சியில் இருந்து வெளியேறிக்கொள்ளலாம். பிறரைப்போல வெறும் புகைப்படத்தைப் பார்த்து நான் பேசவில்லை. படித்த பிறகே பேசுகிறேன். பெரியாரை எதிர்க்க பெரிய காரணங்கள் தேவையில்லை.
எனக்கு உயிர் எனது தாய்மொழியான தமிழ். எனது தாய் மொழியை முட்டாள்களின் மொழி, காட்டுமிராண்டிகளின் மொழி, அது சனியன் அதை விட்டொழி என்று கூறியவரை எதிர்ப்பதுதான் என் இலக்கு’ என்றார்.