தவெக எதிரி யார்?: முதல் மாநாட்டில் வெளிப்படுத்திய விஜய்!

கொள்கை கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப்போவது இல்லை.
தவெக எதிரி யார்?: முதல் மாநாட்டில் வெளிப்படுத்திய விஜய்!
1 min read

பிளவுவாத அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டுபவர்களும் நம்முடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் என தவெகவின் முதல் மாநில மாநாட்டில் பேசியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜய். அவர் பேசியதாவது:

`இங்கு ஏற்கனவே இருக்கின்ற அரசியல்வாதிகள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்கப் போவதும் இல்லை. அதற்காக மொத்தமாக கண்களை மூடிக்கொண்டு இருக்கப்போவதும் இல்லை. சில விஷயங்களில் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் இறங்கி அடித்தால்தான் நம்மை நம்புபவர்களுக்கு நல்லது செய்ய முடியும் எனத் தோன்றியது. அதனால் இறங்கிவிட்டேன்.

இனி எதைப் பற்றியும் யோசிக்கப்போவது இல்லை. ஆனால் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியிலும் யோசனையும் நிதானமும் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துதான் வந்திருக்கிறோம். நாம் யார், நம்முடைய பலம் என்ன என்பதை வாய் வார்த்தைகளில் கூறிக்கொண்டிருக்க முடியாது. அதை செயலில்தான் காட்டவேண்டும்.

அதை நிரூபிக்க அரசியலில் நாம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறோம் என்பதுதான் மிக முக்கியம். அதுதான் நம்முடைய எதிரிகள் யார் என்று கூறும். அப்படி ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் நம்முடைய எதிரிகள் யார் என்று நாம் கூறவேண்டியது இல்லை, அவர்களே நம் முன் வந்து நம்மை எதிர்க்க ஆரம்பிப்பார்கள்.

எதிரிகள் இல்லாத வெற்றி இருக்கலாம், ஆனால் களம் இருக்க முடியாது. அந்த களத்தில் நம்முடைய வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் நம் எதிரிகள்தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை நம் கட்சியின் கொள்கையாக அறிவித்தபோதே நம்முடைய உண்மையான எதிரியையும் அறிவித்துவிட்டோம்.

இந்த நாட்டைப் பாழ்படுத்தும் வகையில் பிளவுவாத அரசியல் செய்பவர்களே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே முழுமுதல் கொள்கை எதிரி. அடுத்து, திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பெயர்களை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கின்ற ஒரு குடும்ப சுயலன கூட்டம்தான் நம்முடைய அடுத்த எதிரி. அதாவது அரசியல் எதிரி.

கொள்கை கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப்போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பதே நம்முடைய தாழ்மையான கருத்து.

அதனால் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளங்களுக்குள் நம்மை சுருக்கிக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் உரிமைகள் சார்ந்து இந்த மண்ணுக்கான மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை நம்முடைய கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்படப் போகிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in