உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு: திருவல்லிக்கேணி தனியார் உணவகத்திற்குப் பூட்டு!

எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இந்த கடையை மீண்டும் திறக்கக்கூடாது. மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த கடைக்கு தற்காலிகமாக பூட்டுபோட்டிருக்கிறோம்.
உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு: திருவல்லிக்கேணி தனியார் உணவகத்திற்குப் பூட்டு!
1 min read

உணவு சாப்பிட்ட 18 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் உணவகத்திற்கு இன்று (ஏப்ரல் 2) உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டுப் போட்டனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டல் பிலால் பிரியாணி என்கிற தனியார் உணவகத்தில் உணவருந்திய 18 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகக் கிடைத்த புகாரை அடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர் சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் அந்த உணவகத்திற்குப் பூட்டுப் போட்டனர்.

அதன்பிறகு, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

`திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய இந்த உணவகத்தில் சாப்பிட்ட ஏறத்தாழ 20 பேர் உடல்நலமில்லாமல் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. கடந்த ஞாயிறு (மார்ச் 30) இரவில் இங்கே உணவருந்திய அவர்கள் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி அதிகாரி எங்களிடம் புகார் அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வாயிலாக இந்த உணவகம் குறித்து எங்களுக்கு வாட்சாப்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் கிடைத்தவுடன் நேரடியாக காலையில் உணவகத்திற்கு வந்து பார்த்தோம்.

பொதுவாக மதியம் 1 மணி அளவில் உணவகம் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவே ஒரு மணி அளவில் மீண்டும் இங்கே வந்து பார்த்தோம். ஆனால் கடையை அடைத்துவிட்டு சென்றுவிட்டார்கள், ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டோம். ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதனால் திருவல்லிக்கேணி காவல்துறையினரின் உதவியுடன் உணவகத்திற்குப் பூட்டு போட்டிருக்கிறோம். எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இந்த கடையை மீண்டும் திறக்கக்கூடாது. மக்களின் நலனைக் கருதி இந்த கடைக்கு தற்காலிகமாக பூட்டுபோட்டிருக்கிறோம்.

எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பூட்டு உடைக்கப்பட்டால், அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in