
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வலியுறுத்தியுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த 26 டிசம்பர் 2022-ல் தெரியவந்தது. இதனை அடுத்து இது தொடர்பாக வழக்கு பதிந்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கு தொடர்பான ஒரு விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜன.24) தாக்கல் செய்யப்பட்டது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜன.24) திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
`வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வேங்கைவயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவு கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
வேங்கை வயல் குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கு 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை.
தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.