தலித்களுக்கான இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகவைக்கும் செயலை செய்துகொண்டிருக்கும் திருமாவளவன் முதலமைச்சர் ஆவதற்கான கனவெல்லாம் நடக்காது என்று பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல். முருகன்.
திமுக கூட்டணியில் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கோரி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் என்று கூறி, அது பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு, மத்திய இணையமைச்சர் எல். முருகனிடம் இன்று (அக்.20) செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளரின் கேள்விக்கு எல். முருகன் அளித்த பதில் பின்வருமாறு:
`என்னைப் பொறுத்தவரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குத் திமுக வழங்குவது அவர்கள் கூட்டணி சம்மந்தப்பட்ட விஷயம். இது திருமாவளவன் குறித்த விஷயம் என்பதால் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூகநீதி பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது.
சமூக நீதி குறித்து அம்பேத்கர் பேசியிருக்கிறார். அனைத்து மக்களுக்கும், அதாவது சமுதாயத்தில் கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேரவேண்டும் என்பது அம்பேத்கரின் எண்ணமாகவும் கொள்கையாகவும் இருந்தது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.
திருமாவளவன் எவ்வாறு ஒரு தலித் தலைவராக இருக்க முடியும்? அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் திருமாவளவன் எவ்வாறு தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்? இவர் எவ்வாறு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தலைவராக இருக்க முடியும்?
அவருடையது ஒரு சிறிய கட்சி. அந்த கட்சியின் தலைவராகவே அவரை நான் பார்க்கிறேன். அனைத்து தலித் மக்களையும் அவர் ஒரே பார்வையில் பார்க்கவேண்டும். அவரது உண்மையான முகமும், தன்மையும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர் சமூகநீதி பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது.
கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதுதான் அம்பேத்கர் நினைத்தார். அதற்காகத்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அவர் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அந்த இடஒதுக்கீட்டை இன்று நீர்த்துப்போகவைக்கும் செயலை செய்துகொண்டிருக்கிறார் திருமாவளவன். அவர் முதலமைச்சர் ஆவதற்கான கனவெல்லாம் நடக்காது’ என்றார்.