வரும் அக்டோபர் 2-ல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ல் விசிக மகளிரணி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு குறித்து இன்று (செப்.10) செய்தியாளர்களைச் சந்தித்தார் திருமாவளவன். அப்போது மக்கள் பிரச்னைக்காக எந்த ஜனநாயக சக்திகளோடும் இணைவோம் என்று அவர் பேட்டியளித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசியவை பின்வருமாறு:
`புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோர் மதுவிலக்குக் கொள்கையை உயர்த்திப் பிடித்தார்கள். காந்தியடிகள் மதுவிலக்கை அவரது முதன்மையான கொள்கையாகக் கடைபிடித்தார். அரசியல் அடிப்படையில் கருத்தியல் அடிப்படையில் அவருடன் முரண்பட்டாலும், அவரது மதச்சார்பின்மை, மதுவிலக்கு போன்றவற்றில் முழுமையாக உடன்படுகிறோம்.
அக்டோபர் 2-ல் காந்தியடிகள் பிறந்தநாளின்போது விசிக லட்சக்கணக்கான மகளிரைத் திரட்டி மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சியில் நடத்துகிறோம். அதில் முதன்மையான கோரிக்கையாக தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படும்.
2016-ல் திமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மது ஒழிப்பில் திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு உடன்பாடு உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம். அதிமுகவும் பங்கேற்கலாம், எந்த கட்சியும் பங்கேற்கலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது.
இதைத் தேர்தலுடன் சம்மந்தப்படுத்த வேண்டாம். தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு. மக்கள் பிரச்னைகளுக்காக மதவாத, சாதிய சக்திகளைத் தவிர வேறு எந்த ஒரு ஜனநாயக சக்திகளோடும் நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டிய தேவை உள்ளது’ என்றார்.