பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவம் இருக்காது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"பாஜகவுக்கு செலுத்தும் வாக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கக்கூடிய வேட்டு."
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவம் இருக்காது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவம் இல்லாமல்போய்விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் மக்களவைத் தேர்தலுக்கான மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தஞ்சாவூரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி, நாகையில் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை. செல்வராஜ் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

"நானும் டெல்டாகாரன் என்ற பெருமையோடு சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். கலைஞர் பிறந்த திருக்குவளை, வளர்ந்த திருவாரூர், வென்ற தஞ்சாவூர் உள்ளடங்கிய பகுதிக்கு வந்திருக்கிறேன்.

இந்தியாவின் ஜனநாயகத்தை, பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, சிறுபான்மையினரை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம் இருக்காது. நாட்டில் ஜனநாயகம் வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல் இது.

பாஜகவுக்கு செலுத்தும் வாக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கக்கூடிய வேட்டு. மாநிலத்தைக் கெடுத்த அதிமுக, மாநிலத்தைக் கண்டுகொள்ளாத பாஜக என இருவரையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். பாஜகவைப்போல அடக்க நினைப்பவர்களையும், அதிமுக போல அடிமையாக இருப்பவர்களையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.

இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க காரணமாக இருந்தவன் நான். அதனால்தான், பிரதமர் மோடி நம்மை அதிகமாய் விமர்சிக்கிறார். பிரதமர் மோடியின் தூக்கத்தை ‘இந்தியா' கூட்டணி கெடுத்துவிட்டது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், திருவாரூரில் வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in