அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது குறித்த கேள்விக்கு ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.
மேலும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
இதனிடையே, அமெரிக்கப் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கோருவது தொடர்பாகவும் துணை முதல்வர் பதவி குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
"அவர்களுடைய (எதிர்க்கட்சிகள்) வெள்ளை அறிக்கை எந்தளவுக்கு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இது ஏமாற்றக்கூடிய திட்டங்களோ ஏமாற்றக்கூடிய நிதி ஒதுக்கீடோ இல்லை. ஏற்கெனவே டிஆர்பி ராஜா இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இதுவே வெள்ளை அறிக்கைதான்" என்றார் முதல்வர்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு, "ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்" என்று முதல்வர் பதிலளித்தார்.