
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தமிழக முதல்வரின் பெயரைப் பயன்படுத்த தடையில்லை என்று அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகளை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் கடந்த ஜூலை 15 அன்று `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியது.
`உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில்’ முதல்வரின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும், திட்டம் தொடர்பான விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரியும், அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நடந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்கவேண்டும் என்றும், ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிதாகத் தொடங்கப்படவுள்ள திட்டங்கள் ஆகியவற்றில் முதல்வரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டனர்.
அரசுத் திட்ட விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் பெயர்களையோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். குறிப்பாக ஆளுங்கட்சியின் பெயர், சின்னத்தைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதேநேரம் மாநில அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது.
இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது.
நாடு முழுவதும் தலைவர்களின் பெயர்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் தமிழக அரசின் திட்டத்தை மட்டும் அடிக்கோடிட்டுக் காட்டியதை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் பல திட்டங்கள் தலைவர்களின் பெயரில் செயல்படுத்தப்பட்டன என்ற திமுக சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை உச்ச நீதிமன்றம் கவனித்தில்கொண்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில்,
`வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பே அரசியல் மோதல்கள் தீர்க்கப்படவேண்டும் என்றும், நீதிமன்றங்களை இதற்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் நாங்கள் மீண்டும் மீண்டும் கூறிப்பிட்டிருக்கிறோம்’ என்று குறிப்பிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், சி.வி. சண்முகத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தது. ஒரு வாரத்திற்குள் இந்த தொகையை தமிழக அரசு வசம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், இதை நலிந்த மக்களின் நலனுக்காகத் தமிழக அரசு பயன்படுத்தவேண்டும் என்றும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.