கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்த சரித்திரம் கிடையாது: எடப்பாடி பழனிசாமி

`மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்’ என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்த சரித்திரம் கிடையாது: எடப்பாடி பழனிசாமி
ANI
1 min read

அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது என்று கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணி சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முதலில் மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, அதன்பிறகு பலூன்களையும், வெண்புறாக்களையும் பறக்கவிட்டார். இதைத் தொடர்ந்து ஏழை, எளிய மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அத்துடன் `மகளிர் நலன் காக்க மாற்றம்வேண்டும்’ என்ற கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்து, அதில் கையெழுத்திட்டார் எடப்பாடி பழனிசாமி.

கோவையில் விமான நிலையத்தில் நேற்று (மார்ச் 7) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, `பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, பாஜகவினால்தான் நாங்கள் தோற்றோம் என்று கூறினார்கள். இன்று பாஜக வேண்டும் என்று தவமிருக்கும் சூழ்நிலையை எங்கள் கட்சியின் ஒவ்வொரு தலைவரும், தொண்டரும் உருவாக்கியுள்ளார்கள்’ என்று பேசினார்.

இந்நிலையில், இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, `தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்பவேண்டாம்’ என்றார்.

அதன்பிறகு, `அதிமுகவைப் பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவைப் பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in