
ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் உள்ள காலனி என்ற சொல்லை பொதுப்புழக்கத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையை சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அவர் பேசியதாவது,
`மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, குற்ற சம்பவங்களில் பூஜ்யமாக இருந்தால்தான் நமக்குப் பெருமை. எனவே இதில் பூஜ்யம் வாங்க, ஒவ்வொரு காவலரும் நூறு விழுக்காடு அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும்.
விசிக எம்.எல்.ஏ. சிந்தனைசெல்வனும், அவரது கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி என்னிடம் கடிதம் அளித்துள்ளனர்; நேரிலும் சந்தித்து வலியுறுத்தினார்கள். அந்த அடிப்படையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்கள் தேர்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியலானது சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில் கடந்த 2019-ல் வழங்கப்பட்ட ஓர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக இந்த முறை ஏற்பட்டுள்ள மற்றும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அதற்கான சட்டரீதியிலான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும்.
அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும்.
மேலும், இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல்லி பதிவாகியுள்ளது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும் வசை சொல்லாகவும் மாறியிருப்பதால் இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.