நிர்மலா சீதாராமனின் செயல் வெட்கப்பட வேண்டியது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதாகக் கூறினார்கள். இதில் 10 விழுக்காடு கூட நிறைவேறவில்லை."
நிர்மலா சீதாராமனின் செயல் வெட்கப்பட வேண்டியது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 min read

அமெரிக்கப் பயணத்தின் மூலம் ரூ. 7,618 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 28 அன்று அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமெரிக்காவில் கையெழுத்தான தொழில் முதலீடுகள் குறித்து விளக்கமளித்தார்.

"அமெரிக்க அரசு முறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளேன். இது வெற்றிகரமான பயணமாகவும் சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்துள்ளது. தனிப்பட்ட முறையில் அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு சாதனைக்குரிய பயணமாக இது அமைந்துள்ளது.

உலக நாடுகளில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடையத் தொழிலைத் தொடங்க தொழில் முதலீடுகளைச் செய்ய வைப்பதற்கான ஒரு முயற்சியாகக் கடந்த 28 அன்று அமெரிக்கா சென்றேன். செப்டம்பர் 12 வரை அங்கு இருந்தேன். இந்த 14 நாள்களும் மிகப் பெரிய பயனுள்ளப் பயணமாக அமைந்துள்ளது. உலகின் புகழ்பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களிடம் சந்திப்பை நடத்தியுள்ளேன். இதில் 18 நிறுவனங்கள் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள். இந்த சந்திப்பின்போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 7,618 கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம், 11,516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் எனப் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், மற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றார்கள். தமிழ்நாடு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டு அரசோடு இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும், பல நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு மகுடன் சூட்டியதைப்போல, தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு தவிர்க்க இயலாத காரணத்தால் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், எங்களுடைய வேண்டுகோளை ஏற்று சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது.

தமிழ்நாட்டின் சார்பிலும் தமிழ்நாட்டின் மக்கள் சார்பிலும் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்று, அவர்கள் உற்பத்தியைத் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளையும் வழங்க ஆணையிட்டுள்ளேன்.

அதேபோல என் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு மேற்கொண்டு இதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய பயிற்சிகளை வழங்க கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதன்பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

"அமெரிக்கப் பயணத்துக்கு முன்பு உங்களைச் (செய்தியாளர்கள்) சந்தித்து தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்து விளக்கமாகக் கூறினேன். இதுமட்டுமில்லாமல் தொழில் துறை அமைச்சர் புள்ளி விவரங்களோடு விளக்கியிருக்கிறார். சட்டமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி படித்துப் பார்த்து தெரிந்துகொண்டு பேச வேண்டும். அவர் (எடப்பாடி பழனிசாமி) முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதாகக் கூறினார்கள். இதில் 10 விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதைச் சொன்னால் அவருக்குப் பெரிய அவமானமாக இருக்கும்.

ஜிஎஸ்டி குறித்த தொழில் முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை அவர் முன்வைத்தார் என்பதற்காக, இந்த விவகாரத்தை ஒன்றிய அமைச்சர் கையாண்ட விதம் என்பது வெட்கப்பட வேண்டியது. இதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பள்ளிக்கல்வித் துறை, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமரிடம் உடனடியாக நேரம் கேட்டு நானும் வலியுறுத்தவிருக்கிறேன்.

எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான முதலீடுகள் இந்தப் பயணத்தில் கிடைத்துள்ளன. உறுதியான முதலீடுகள்தான் வந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.

திமுக பவள விழாவைக் கொண்டாடவிருக்கிறது. நிச்சயமாக மாற்றம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என நம்புகிறேன்.

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என்று கூறியதன் பின்னணி குறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். இவரை மீறி நான் ஒரு பெரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது அரசியல் நோக்கத்தோடு நடத்தக்கூடிய மாநாடு அல்ல. இது பொதுவான விஷயம். இதற்கும் அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என அவர் கூறியிருக்கிறார். இதைதான் நான் கூறுகிறேன்.

அமெரிக்கா புறப்படும் முன் ஏற்கெனவே வந்த முதலீடுகள் குறித்தும் உருவான வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளேன். தொழில் துறை அமைச்சர் கூறியுள்ளார். சட்டமன்றத்திலும் பதிவாகியுள்ளது. தற்போது வந்துள்ள முதலீடுகளும் 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றக்கூடிய வகையில்தான் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in