மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழசை சௌந்தரராஜன்.
இன்று (அக்.2) சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியவை பின்வருமாறு:
`மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாற்றப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மது ஒழிப்பு மாநாட்டுக்கு அவர்களின் கட்சியிலேயே ஆதரவு இல்லை என்பதையும் கேள்விப்பட்டேன். அண்ணன் திருமா அவர்கள் இந்த வழியாக வந்துவிட்டு காந்தியைத் தவிர்த்துவிட்டு காமராஜருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார் எனக் கேள்விப்பட்டேன்.
இது உண்மையான என்று தெரியவில்லை. மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர் ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியுள்ளாரோ என்னமோ. ஆனால் ஏன் இந்த வேறுபாட்டை காண்பிக்கின்றனர்? மது ஒழிப்பு என்பது மகாத்மா காந்தி அவர்களின் கொள்கை.
அதை அவர்கள் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதால் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. அமைச்சர் ரகுபதி, முதல்வர் ஸ்டாலினை மூலவர் என்றும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை உற்சவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளுக்கும் மூலமாய் இருந்தவர் மூலவர். தனக்குத் துணை முதல்வர் பதவி கிடைத்துவிட்டது என்று உற்சாகமாக இருப்பவர் உற்சவர். உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், உதாரணத்துக்கு எங்கள் கடவுள்களைக் காண்பிக்கிறீர்கள்.
இந்தியா முழுவதும் முதலில் மதுவிலக்கை கொண்டுவந்த பிறகு நாங்கள் தமிழகத்தில் கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். படிப்பதற்கு ஒரு கொள்கை கொண்டுவந்தால் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள், குடிப்பதற்கு ஒரு கொள்கை கொண்டுவந்தால் மட்டும் ஒப்புக்கொள்வீர்களா?’ என்றார்.