

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் விமான டிக்கெட்டுகளின் கட்டண உயர்வைத் தடுக்க, நிர்ணயிக்கப்பட்ட கட்டண உச்சவரம்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம், கடந்த சில நாள்களாக விமான சேவை ரத்து, விமான தாமதம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை உருவானது. இதையடுத்து, மற்ற நிறுவனங்களின் விமான டிக்கெட்டுகளைப் பெற பயணிகள் ஆர்வம் காட்டினர். இதனால் விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தன.
சராசரியாக ரூ. 10,000 - ரூ. 20,000 வரை இருக்கும் விமான டிக்கெட் கட்டணங்கள் ரூ. 1 லட்சத்தைத் தொட்டன. இதனால் பயணிகள் விமானங்களில் பயணிக்க முடியாத நிலை உருவானது. அவசர பயணம் மேற்கொள்ள விமானங்களை நாடுபவர்களுக்கும் சிக்கல் உருவானது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கி, மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான டிக்கெட் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், விமான டிக்கெட் கட்டணத்திற்கு உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மற்ற நிறுவனங்கள் விமான டிக்கெட் கட்டணங்களை வழக்கத்தை விட அதிகமான அளவில் உயர்த்தியிருப்பதை விமான போக்குவரத்து அமைச்சகம் கவனத்தில் கொள்கிறது. இந்தச் சர்ந்தப்பவாத விலையேற்றத்தில் இருந்து பயணிகளைக் காக்கும் வகையில், விமான டிக்கெட் கட்டணங்களின் உச்ச வரம்பை நிர்ணயித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை முழுமையாக சீராகும் வரை, இந்த வரம்புகள் அமலில் இருக்கும். சந்தையில் விலை நிர்ணய ஒழுக்கத்தைப் பேணுதல், அவதிப்பட்டு வரும் பயணிகளிடமிருந்து சுரண்டுவதைத் தடுப்பது மற்றும் மூத்த குடிமக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட அவசரமாகப் பயணம் செய்ய வேண்டியவர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கமாகும்.
நிகழ்நேர தரவு மற்றும் விமான நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பயண தளங்களுடன் தீவிர ஒருங்கிணைப்பு மூலம் கட்டண நிலைகளை அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும். பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளிலிருந்து விலகினால் பொது நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பயணிகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் தொகையையும் தாமதமின்றி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட அல்லது தடைபட்ட அனைத்து விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை டிசம்பர் 7 இரவு 8 மணிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும். ரத்து செய்யப்பட்டதால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எந்த மறு அட்டவணை கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது. பணத்தைத் திரும்பப் பெறும் செயலாக்கத்தில் ஏதேனும் தாமதம் நிகழ்ந்தால் உடனடி ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Ministry of Civil Aviation has invoked its regulatory powers to ensure fair and reasonable fares across all affected routes.