மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் | Ramadoss |

அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் விவகாரங்களில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது...
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப்படம்)
பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப்படம்)
1 min read

மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனையடுத்து இரு தரப்புகளாகக் கட்சி பிரிந்த நிலையில், அன்புமணி தரப்பு பாமக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.

அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

இதற்கிடையில் பாமக தலைவராக ஆகஸ்ட் 26 வரை அன்புமணி தொடர்வார் என்றும், பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கியும் அன்புமணி முகவரிக்குத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இதனைக் கடந்த பிப்ரவரி 2 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் 2 வழக்குகள்

இதற்கிடையில், பாமக தலைவர் தான் என்பதால், தன்னைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் வரை தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என்றும், கட்சிக்குத் தொடர்பில்லாதவர்கள் மாம்பழச் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடக் கோரி மேலும் இரண்டு வழக்குகள் ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்டது.

உயர் நீதிமன்றம் தலையிட முடியாது

இந்த இரண்டு வழக்குகளும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாத்ஸவா மற்றும் நீதிபதி அருள் முருகன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கீகரிக்கப்படாத கட்சியான பாமக, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால் இதன் விவகாரங்களில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் ராமதாஸுக்கு மாம்பழச் சின்னத்தை ஒதுக்கிவிட்டுப் பிறருக்கு வழங்காமல் முடக்கி வைக்கவும் முடியாது” என்று வாதிட்டார்.

உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “அரசியல் கட்சியின் உள் விவகாரம் சிவில் நீதிமன்றத்தில் அணுகி தீர்வு காணப்பட வேண்டியது. அங்கு கிடைக்கும் உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இதில் தந்தை மகனுக்கு இடையே என்ன பிரச்னை? ஏன் தந்தை சொல்வதை மகன் கேட்பதில்லையா?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், திமன்றத்தின் நேரத்தை இதுபோல் வீணடித்தால் அபராதம் விதிக்க நேரும் என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Summary

The Madras High Court has dismissed the case filed by PMK founder Ramadoss seeking to ban the mango symbol.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in