100% இடஒதுக்கீடு நடைமுறையாகும் நாளே உண்மையான சமூகநீதி நாள்: ராமதாஸ்

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடியும் எனக் கூறி கழுத்தறுத்துவிட்டது திமுக அரசு.
100% இடஒதுக்கீடு நடைமுறையாகும் நாளே உண்மையான சமூகநீதி நாள்: ராமதாஸ்
1 min read

தமிழகத்தில் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்கி, 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள்தான் உண்மையான சமூகநீதி நாள் என பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அவர் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான அரசாணை (1070 எண்) 97 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட நாள் இன்று.

1921-ம் ஆண்டு செப்டம்பர் 16-ல் பனகல் அரசர் தலைமையிலான அரசு 100% இடப்பங்கீடு  வழங்குவதற்கான அரசாணையை (எண் 613) நிறைவேற்றினாலும் இடப்பங்கீடு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடவில்லை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகுதான் சென்னை மாகாண மக்களுக்கு 100% இடப்பங்கீடு சாத்தியமானது.

இந்தியா விடுதலையடைந்து 1950 வரையில் சில, பல குறைகள் இருந்தாலும் 100% இடப்பங்கீடு நடைமுறையில் இருந்தது. சமூகநீதிக்கு எதிரானவர்களின் சூழ்ச்சியால் 100% இடப்பங்கீடு நீதிமன்றங்களின் துணையுடன் வீழ்த்தப்பட்டது. 97 ஆண்டுகளுக்கு முன் இடப்பங்கீட்டை சாத்தியமாக்கிய இந்த சமூகநீதி மண்ணில் இன்று சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறிய திமுக அரசு, திடீரென  ஒரு நாள் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் வன்னியர் இடஒதுக்கீடு வழங்க முடியும் என கூறி, பாட்டாளி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டது.

சமூகநீதி போர்வை போற்றி, சமூக அநீதிக்கு சாமரம் வீசும் ஆட்சியாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத ஏராளமான சமுதாயங்கள் உள்ளன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள்தான் உண்மையான சமூகநீதி நாள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in