
தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில்கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா மத்திய கலாசாரத் துறை சார்பில் ஜூலை 23-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் இறுதி நாளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நண்பகல் 12 மணியளவில் அரியலூர் வந்தடைந்தார். கங்கைகொண்ட சோழபுரத்தில் வழிபட்ட பிரதமர் மோடி, கண்காட்சியைப் பார்வையிட்டார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ரசித்தார்.
தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது ராஜேந்திர சோழன் படையெடுக்கச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதன்பிறகு, பிரதமர் மோடி தனது உரையை நிகழ்த்தினார்.
வணக்கம் சோழ மண்டலம் என்று கூறி உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி.
"பிரகதீஸ்வரர் காலடியில் வழிபடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். 140 கோடி மக்களின் நலன் மற்றும் நாடு தொடர்ந்து வளச்ச்சியடையப் பிரார்த்தனை செய்தேன். சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க விரும்புகிறேன்.
இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நல்லுறவும் வர்த்தக உறவும் வைத்திருந்தார்கள். நேற்று தான் நான் தற்செயலாக மாலத்தீவிலிருந்து திரும்பினேன். இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது பாக்கியம்.
சோழப் பேரரசை இந்தியாவின் பொற்காலங்களின் ஒன்றாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்ற பாரம்பரியத்தை சோழப் பேரரசு முன்னெடுத்துச் சென்றது.
மக்களாட்சிக்கு பிரிட்டனின் மேக்னா கார்டா குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் பேசுவார்கள். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சோழப் பேரரசில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
படையெடுத்த பிறகு மன்னர்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றைக் கைப்பற்றிக்கொண்டு வருவார்கள் எனக் கேட்டிருக்கிறோம். ஆனால், ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்தார்.
இன்று காசியிலிருந்து மீண்டுமொரு முறை கங்கை நீர் கொண்டுவரப்பட்டதில் நான் மகிழ்ச்சிகொள்கிறேன். நான் காசி நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி. எனக்கும் கங்கை நதிக்கும் இடையே தொடர்பு உள்ளது.
இன்றைய இந்தியா, பாதுகாப்பை முதன்மையானதாகக் கருதுகிறது. யாராவது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தினால், என்ன நடக்கும் என்பதை உலக நாடுகள் ஆபரேஷன் சிந்தூரின்போது பார்த்தன. அவர்களுடைய மொழியில் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்.
இந்தியாவின் எதிரிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உலகில் எங்குமே பாதுகாப்பான இடம் கிடையாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டில் புதிய உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்துள்ளது ஆபரேஷன் சிந்தூர்.
நம் பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இங்கு மேலும் ஓர் உறுதிப்பாட்டை மேற்கொள்கிறேன். வரவிருக்கும் காலங்களில் தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், அவருடைய மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனுடைய பிரமாதமான உருவச் சிலை அமைக்கப்படும்" என்றார் பிரதமர் மோடி.
PM Modi | Rajendra Cholan | Ariyalur | Gangaikonda Cholan | Gangaikonda Cholapuram