கோவையில் 'அண்ணாமலை எனும் திருப்புமுனை' நூல் வெளியீடு!

அரசியலில் தொழில் வல்லுநர்கள் இனி அதிகம் இடம்பெறுவார்கள் என்று அண்ணாமலை பேசினார்...
கோவையில் 'அண்ணாமலை எனும் திருப்புமுனை' நூல் வெளியீடு!

அண்ணாமலை எனும் திருப்புமுனை நூல் வெளியீட்டு விழா அண்ணாமலை முன்னிலையில் கோவையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையின் தலைமையில் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, அறிவியலாளர் முரளி, பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ் மற்றும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் கலந்துகொண்ட 'Professionals in Politics' நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் ஸ்ரீசாய் விவாஹா மஹாலில் இன்று மாலை நடைபெற்றது. இதே நிகழ்ச்சியில் அண்ணாமலை எனும் திருப்புமுனை என்கிற நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

அண்ணாமலையின் அரசியல் பயணம் குறித்து அண்ணாமலை எனும் திருப்புமுனை என்கிற பெயரில் தமிழிலும், The Idea called Malai என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் முறையே கிழக்கு மற்றும் ஆக்சிஜன் புக்ஸ் ஆகிய பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நூலின் விலை ரூ. 250. நூலாசிரியர் சுரேஷ் குமார், இதற்கு முன்பு மூன்று நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு நிகழ்ச்சிக்கான அனுமதியைப் பெற்றார்கள்.

இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அரசியலில் தொழில் வல்லுநர்கள் இனி அதிகம் இடம்பெறுவார்கள். பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் தொழில் வல்லுநர்கள் அதிகம் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன். அரசியலுக்குள் வரவிரும்பும் தொழில் வல்லுநர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும். அடுத்த 10 வருடங்களில் எதிர்க்கட்சியில் உள்ள தொழில் வல்லுநர்களும் அமைச்சரவையில் இடம் பெறும் காலம் வரும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in